இலங்கையின் சுதந்திர தினம் இன்று

History Of Sri Lanka_Independence_Image_7

இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின்  69 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இற்றைக்கு 69 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவின் காலணித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற தினத்தை நாம் வருடாந்தோறும் சுதந்திர தினமாக கொண்டாடுகின்றோம்.
1948 ஆம் ஆண்டு முதல், 2017 ஆம் ஆண்டு வரை நாம் கடந்து வந்துள்ள காலத்தை உற்று நோக்குமிடத்து அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
1948 ஆண்டு நாட்டு மக்கள் எதிர்பார்த்த சுதந்திரத்திற்கும் 69 வருடங்களின் பின்னர் மக்கள் எதிர்பார்க்கும் சுதந்திரத்திற்கும் இடையே பாரிய மாற்றங்கள்  ஏற்பட்டுள்ளன.
இந்த நேரத்தில் நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக போராடிய மூத்த அரசியல் தலைவர்களுக்கு நாம் அனைவரும் நினைவு கூறுவதுடன் அவர்களுக்கு நன்றி கூறவும் கடமைபற்றிருக்கின்றோம்.
இலங்கை சுமார் 400 ஆண்டு காலமாக வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களின் கீழ் இருந்தது.
இந்த காலக்கட்டத்தில் எமது கலாசாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் உள்நாட்டு பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்திருந்தது.
இவ்வாறான நிலையில் எமது மூத்த வீரர்கள் வெளிநாட்டின் காலனித்துவத்திலிருந்து நாட்டைம மீட்டெடுக்க இன, மத, குல பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெற்றனர்.
ஆரம்பத்தில் போர்த்துகேயர்களும், ஒல்லாந்தரும் எமது நாட்டை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்த போதிலும் பிரித்தானியர்களளே அதிக ஆண்டுகள் நாட்டை ஆண்டனர்.
1505 ஆண்டு நவம்பர் மாதம் போர்த்துக்கேய கொடிகளுடன் கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டன.
இந்த கப்பல்களின் வரவு இலங்கை வரலாற்றில் மற்றுமொரு திருப்புமுனையாக அமைந்ததுடன் 1517 ஆம் ஆணடு போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோர பிரதேசங்களின் அதிகாரத்தை தம்வசப்படுத்திக் கொண்டனர்.
ஒரு நூற்றாண்டிற்கும் அதிகமான காலமாக இலங்கையை ஆக்கிரமிப்பு செய்த போர்த்துக்கேயருக்கு, 1655 ஆண்டு ஒல்லாந்தர் ஆக்கிரமிப்பு மிகப்பெரிய தலையீடாக அமைந்தது.
அன்று முதல் ஒல்லாந்தர்களின் செயற்பாடு இலங்கையில் மேலோங்கியிருந்த நிலையில் 1796 ஆம் ஆண்டு ஆங்கிலேயரும் இலங்கையில் கால்தடம் பதித்தனர்.
இதனை அடுத்து ஆங்கிலேயர் முதலாவதாக இலங்கையின் கரையோர பகுதிகளின் அதிகாரத்தை கைப்பற்றினார்கள்.
ஆனால் இலங்கையை முழுமையாக ஆக்கிரமிப்பது பிரித்தானியர்களுக்கு எளிதான ஒன்றாக அமையவில்லை.
இந்த நிலையில் கடும் முயற்சியின் விளைவாக ஆங்கிலேயர்கள் கண்டி ராசதானியைக் கைப்பற்றியதுடன் 1815 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டின் உரிமையை பெற்று கொண்டனர்.
ஆங்கிலேயே ஆட்சியில் பல்வேறு இன்னல்களை சந்தித்து அதிலிருந்து மீள் எழுவதற்கு 1818 ஆம் ஆண்டு கிளர்ச்சி காரணமாக அமைந்தது.
உயர் குலத்தினருக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தி வீர மொனரவில கெப்பெட்டிபொல உட்பட 1818 ஆம் ஆண்டு சுதந்திர போராட்டத்தின் தலைவர்களை கொலை செய்து ஆங்லேயர்கள் மீண்டும் அதிகாரத்தை உறுதிப்படுத்தி கொண்டனர்.
1848 ஆம் ஆண்டு கொங்காலே கொட பண்டா, வீரபூரன் அப்பு தலைமையில் மாத்தளை கிளர்ச்சி இரண்டாவது சுதந்திர தின போராட்டமாக முன்னெடுக்கப்பட்ட போதும் அதனை ஆங்கிலேயர்கள் தந்திரமான முறையில் முறியடித்தனர்.
ஆயுத போராட்டத்திற்கு பதிலாக 1917 ஆம் ஆண்டில் இலங்கை தேசிய சங்கத்தை அமைத்து அரசியல் ரீதியிலான போராட்டம் மற்றும் அநகாரிக தர்மபாலவின் சமூக வழிக்காட்டல்கள் சுதந்திர போராட்டத்திற்கு அடித்தளமிட்டது.
இந்த அரசியல் சுதந்திர போராட்டத்திற்கு தலைமைத்தாங்கிய டி.எஸ். சேனாநாயக்க உள்ளிட்ட சிங்கள தலைவர்கள் போன்றே பொன்னம்பலம் உள்ளிட்ட தமிழ், முஸ்லிம் தலைவர்களும் சுதந்திரத்திற்காக போராடினர்.
இறுதியில் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி பிரித்தானியாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இலங்கை பூரணமாக சுதந்திரத்தை தழுவிக் கொண்டது.
அதன் பின்னர் எமது நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் இன்று 69 வருடங்கள் கடந்துள்ள நிலையில் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் எம்மிடம் விட்டுச் சென்ற பிரச்சினைகளை நாம் தீர்த்து வைத்துள்ளோமா என்பது கேள்விக்குறியே…
பெரும்பாலும் அதன் பின்னர் அதிகாரத்திற்கு வந்த அரசாங்கங்கள் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் முன்னுரிமை அளித்து வந்தது.
எனினும் இனங்களுக்கிடையே ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், நட்புறவு ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளவில்லை என்றே கூற வேண்டும்.
அவ்வாறு செய்திருந்தால் 1980 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நாட்டில் தொடர்ந்த இன அடிப்படையிலான பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.
ஒரு நாட்டின் அபிவிருத்தியில் பொருளாதார அபிவிருத்தி, பௌதீக வள அபிவிருத்தி என்பன முக்கியம் பெறுவதைப்போன்றே அங்கு வாழும் மக்களின் கலாசார பண்புகள், மதப் பண்புகள், மொழிப் பண்புகள் ஆகிய அனைத்தையும் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளுதல் மிக முக்கியம்.
ஜனநாயகம் வலுவடைந்துள்ள ஒரு யுகத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

History Of Sri Lanka_Independence_Image_7

History Of Sri Lanka_Independence_Image_3