சர்வதேச தொழிலாளர் தினம்

0

உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது.

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இதன்போது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது.

இதுவே தொழிலாளர்த்தினத்தின் ஆரம்பமாக காணப்பட்டது.

இதேவேளை 1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர்.

இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர்.

இவ்வாறு பல உலக நாடுகளின் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து 8 மணி நேர வேலைக்கான போராட்டம் மேற்கொண்டனர்.

1889ம் ஆண்டு ஜூலை மாதம் 14ம் திகதி பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது.

இதன்போது 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.